
கோலாலம்பூர், நவ 18 – ஒற்றுமை அரசாங்கத்தில் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான தீர்க்கமான முடிவை ம.இ.கா எடுக்கும். எங்களை பொறுத்தவரை அடுத்த பொதுத் தேர்தல் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால் ஒற்றுமை அரசாங்கத்தில் எங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதில் ம.இ.கா தயங்காது என 77ஆவது பொதுப் பேரவையில் அக்கட்சியின் தேசிய துணைத்தலைவரான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ம.இ.கா தேசிய தலைவர் தேர்தலில் நடப்பு தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் மற்றும் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் . சரவணன் ஆகிய இருவரும் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் பேராளர் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதோடு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் தமது பதவிக் காலத்தில் புதிய தமிழ்ப் பள்ளிகள் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கியது உட்பட பல்வேறு அணுகூலங்கள் இந்திய சமூகத்திற்கு கிடைப்பதற்கு உதவியிருப்பதால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என ம.இ.கா உறுப்பினர்கள் விரும்புவதால் அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக சரவணன் கூறினார்.