
கோலாலம்பூர், டிச 3 – பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி, மற்றும் GPS எனப்படும் Gabungan Parti Sarawak ஆகியவற்றைக் கொண்ட ஒற்றுமை அரசாங்கம் நாட்டின் நலன் மற்றும் மக்களின் நன்மையைக் கருதி எதிர்கால சவால்களை சமாளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக துணைப்பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவரான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். உலகின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை அடுத்த ஆண்டு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பதிய அரசாங்கத்தின் பொறுப்புணர்வு கடுமையாக இருப்பதாக அவர் கூறினார். மலேசியா மற்றும் அதன் மக்களின் நலன்களை புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் அகமட் ஸாஹிட் நம்பிக்கை தெரிவித்தார். எனவே அனைத்து தரப்பினரும் மக்களிடையே வெறுப்புணர்வு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.