ஒலிம்பிக்கில் சாதித்த ஏரன் ச்சியா – சோ வூய் யிக் மற்றும் லீ சீ ஜியாவுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் -23, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆடவர் பூப்பந்து இரட்டையர் ஏரன் ச்சியா – சோ வூ யிக் (Aaron Chiah – Soh Wooi Yik) தேசிய விளையாட்டு வெற்றி சன்மானத் திட்டத்தின் (SHAKAM) கீழ் 200,000 ரிங்கிட்டை பெறவிருக்கின்றனர்.
அத்தொகையைப் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள் என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ (Hannah Yeoh) தெரிவித்தார்.
SHAKAM வரலாற்றில் குழு போட்டிகளுக்கு இவ்வளவு உயரியத் தொகை சன்மானமாக வழங்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இதற்கு முன் வெண்கலம் வென்றால் 100,000 லட்சம் ரிங்கிட் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும் ஒலிம்பிக் அரங்கில் கடைசி வரை போராட்டம் நடத்தி பதக்கத்துடன் நாடு திரும்பியிருப்பதைக் கருத்தில் கொண்டு பரிசுத் தொகையை 200,000 ரிங்கிட்டுக்கு உயர்த்த முடிவெடுக்கப்பட்டதாக ஹானா சொன்னார்.
வாழ்நாள் முழுக்க மாதாந்திர பென்சின் தொகையாக தலா ஈராயிரம் ரிங்கிட்டையும் இருவரும் பெறுவர்.
இவ்வேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற லீ சீ ஜியா (Lee Zii Jia) மொத்தமாக 250,000 ரிங்கிட்டை பரிசுப் பணமாகப் பெறுகிறார்.
SHAKAM பரிசுத் திட்டத்தின் படி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 10 லட்சம் ரிங்கிட்டும், வெள்ளிப் பதக்கம் வென்றால் 3 லட்சம் ரிங்கிட்டும், வெண்கலப் பதக்கத்திற்கு 1 லட்சம் ரிங்கிட்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.