கோலாலம்பூர், ஆகஸ்ட்-7, நம்பிக்கையும், பின்னணியும் கருதாது, அனைவரும் தங்கள் சொந்த நாட்டில் மட்டுமல்லாது, உலகில் எங்கு பயணம் செய்தாலும், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் மரியாதையாக நடத்தப்படுவதையும் உணரும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.
மேன்மைத் தங்கிய பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா ( Sultan Nazrin Shah) அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
எனினும், நடைமுறையில் அது எப்போதும் சாத்தியமாவதில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
பல நூற்றாண்டுகளாக ஒத்தச் சிந்தனையுடனையவர்களின் நன்முயற்சிக்குப் பிறகும், உலகில் அரவணைத்துச் செல்லும் போக்கு இல்லாதது , சமயச் சுதந்திரம் தடுக்கப்படுவது போன்றவை இன்னமும் கண்கூடு என சுல்தான் நஸ்ரின் சொன்னார்.
பல நாடுகளில், நம்பிக்கை மற்றும் பின்னணி உள்ளிட்ட பாகுபாடுகளால் பலருக்கு அடிப்படை மனித உரிமைகளே மறுக்கப்படுகின்றன.
இன்னும் சில நாடுகளில் குறிப்பிட்ட சில சமயத்தவர்கள் அரசாங்கத்தாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள்; வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவலங்களும் நடக்கவே செய்கின்றன.
எனவே, மலேசியர்களாகிய நாம், இந்த நாடும் வளமும் நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணி பெருமையும் நிம்மதியும் அடைய வேண்டும்.
பல்லின கலைக் கலாச்சாரத்தைக் கட்டிக் காத்து, சகிப்புத்தன்மையை மேலோங்கச் செய்து, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் உன்னத நிலையை மலேசியா போல் உலகில் வேறெங்கும் காண்பதரிது என்றார் அவர்.
2024 தென்கிழக்காசிய வட்டார மனித கண்ணியம் மீதான மாநாட்டில் சிறப்புரையாற்றிய போது சுல்தான் நஸ்ரின் அவ்வாறு கூறினார்.