கலிஃபோர்னியா, ஆகஸ்ட்-16 – அமெரிக்கா கலிஃபோர்னியாவில் ஓட்டுநரே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டேக்சிகளால் குடியிருப்பாளர்கள் நிம்மதியிழந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சான் ஃபிரான்சிஸ்கோ ( San Francisco) கார் நிறுத்துமிடத்தில் அவை வந்திறங்கிய போது, இனி பாதுகாப்பாகவும் இரைச்சல் இல்லாமலும் இருக்கலாமென அருகிலிருக்கும் குடியிருப்பாளர்கள் சந்தோஷமடைந்தனர்.
ஆனால், நினைத்ததற்கு மாறாக இனி தூங்கா இரவுகள் தான் காத்திருக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
கார் நிறுத்துமிடத்தில் அந்த ரோபோ டேக்சிகளின் ஹார்ன் சத்தம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறது.
ரோபோத்திக் வகை என்பதால், வரும் போதும் போகும் போதும் ஒன்றோடு ஒன்று ஹார்ன் அடித்துக் கொள்கின்றன.
கார் நிறுத்துமிடத்தில் ரிவர்ஸ் செய்யும் போதும் அதே நிலைமை தான்.
இதனால் விடியற்காலை வரை தூங்க முடியாமல் கஷ்டப்பட்ட ஒரு பெண்மணி, அந்த ரோபோ கார்களின் ‘அட்டகாசத்தை’ you tube-பில் நேரலை செய்தார்.
பல்லாயிரக்கணக்கானோர் அதைப் பார்த்து தங்கள் பங்குக்கு பரிதாபப்பட்டனர்.
இது சரிபட்டு வராது என முடிவெடுத்த குடியிருப்பாளர்கள், கார் நிறுவனமான Waymo-விடம் புகாரளித்தும் விட்டனர்.
தாய் நிறுவனமான கூகளின் Alphabet தற்போது அந்த ஹார் ன் பிரச்னையை சரி செய்துள்ளது.
ஆளில்லாமல் இயங்குவதால், மோதிக் கொள்வதைத் தவிர்க்கவும், மிக மிக நெருக்கத்தில் செல்லாதிருக்கவுமே அந்த ஹார்ன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அது விளக்கியது.