
செர்டாங், மார்ச்-20 – ஓரினச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டிங் செயலியான Grindr மூலம் ஆண் சிகை அலங்கார நிபுணரை ஒரு வீட்டிற்கு அழைத்து, அவரிடம் 67,000 ரிங்கிட்டைக் கொள்ளையடித்த 5 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
செர்டாங் போலீஸ் தலைவர் AA அன்பழகன் அதனை உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டவரான 41 வயது நபர் கடந்த புதன்கிழமை அச்செயலி மூலம் சந்தேக நபர்களில் ஒருவருடன் பழகி, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கெம்பாங்கனில் உள்ள சந்தேக நபரின் வாடகை வீட்டில் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
பேசியபடி இரவு 7.30 மணியளவில், புகார்தாரர் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்றார்
அங்குக் கழிப்பறையைப் பயன்படுத்தி விட்டு வெளியேறிய போது, வீட்டில் மேலும் இரண்டு ஆண்கள் இருப்பதை புகார்த்தாரர் கண்டார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று பேரும் புகார்தாரரின் கைகளையும் கால்களையும் கட்டி, அவர்கள் சொன்னதைச் செய்யும்படி கட்டளையிட்டனர்.
சந்தேக நபர்களில் ஒருவன் அவரை மரக்கட்டையால் அடிக்க, மற்றொருவன் அவரது கைப்பேசியை எடுத்து சந்தேக நபரின் நண்பருக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் 67,000 ரிங்கிட்டை மாற்றினான்.
போலீசில் புகாரளிக்கக் கூடாது என எச்சரித்து, பின்னர் அவரை அக்கும்பல் விடுவித்துள்ளது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், செர்டாங் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு பின்னர் வங்கிக் கணக்கின் உரிமையாளர் உட்பட 5 பேரைக் கைதுச் செய்ததாக அன்பழகன் கூறினார்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், சந்தேக நபர்கள் அனைவரும் 18 முதல் 22 வயதுக்குட்பட்ட தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர்.
அவர்களில் நால்வர் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; மேலுமொருவர் போலீஸ் உத்தரவாதத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.