
சென்னை, மார்ச் 28 – அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் , பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிய நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பட்டது. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார் . அந்த முடிவைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.