பக்கு, டிசம்பர்-26 – அசர்பைசான் நாட்டிலிருந்து ரஷ்யா செல்லும் வழியில் கசக்ஸ்தானில் விழுந்து வெடித்துச் சிதறிய விமானத்தின் கடைசி நிமிடங்கள் வீடியோவில் பதிவாகி வைரலாகியுள்ளன.
உள்ளேயிருந்த பயணி ஒருவர் கடைசி நேரத்தில் தன் கைப்பேசியில் பதிவுச் செய்த வீடியோ அது.
விமானம் விழுவதற்கு முன்பாக கடவுளை அவர் வேண்டிக் கொள்கிறார்.
வீடியோவில் மஞ்சள் சுவாச கவசங்கள் இருக்கைகள் மீது தொங்குவதைக் காண முடிவதோடு, பின்னால் அழுகுரலையும் கூச்சலையும் கேட்க முடிகிறது.
பிறகு கதவு மணியோசைக்கு இடையில், இருக்கை வார்பட்டையை அணியுங்கள் என்ற ஒலியும் கேட்கிறது.
இன்னொரு வீடியோவில் விமானத்தின் உட்கூரை பேனல் தலைகீழாக உள்ளது; பொருட்கள் அலங்கோலமாகவும் ஆங்காங்கே இரத்தக் கறைகளும் உள்ளன.
மக்கள் அலறுவதையும் அதில் கேட்க முடிவதை வைத்துப் பார்க்கும் போது, அது விமானம் விபத்துக்குள்ளானப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோ என தெளிவாகத் தெரிகிறது.
நேற்று காலை நிகழ்ந்த அவ்விபத்தில் 38 பேர் உயிரிழந்த வேளை, 32 பேர் உயிர் தப்பினர்.
இதையடுத்து இன்று வியாழக்கிழமை அசர்பைசானில் தேசிய துக்க நாளாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர்.
இவ்வேளையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் அசர்பைசான் அதிபருக்கு அழைத்து அனுதாபம் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய, அசர்பைஜான், கசக்ஸ்தான் இரு நாடுகளுமே விசாரணைகளைத் தொடக்கியுள்ளன.