பேங்கோக், மே 9 – தாய்லாந்து, இவ்வாண்டு இறுதிக்குள் கஞ்சாவை மீண்டும் போதைப் பொருள் பட்டியலில் இணைக்கும் என, அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
கஞ்சாவை பொழுதுபோக்கு நோக்கத்திற்காக பயன்படுத்த முதன் முதலில் அனுமதித்த ஆசிய நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து திகழ்கிறது.
எனினும், அந்த அனுமதி வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தாய்லாந்தில், கஞ்சாவிற்கான உள்நாட்டு சில்லறை விற்பனைத் துறை விரைவான வளர்ச்சியை பதிவுச் செய்துள்ள நிலையில், கடந்த ஈராண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கடைகள் மற்றும் வணிகங்கள் உருவாகியுள்ளன. அதன் வாயிலாக, 2025-ஆம் ஆண்டு வாக்கில், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 480 கோடியாக பதிவாகுமென கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், சட்டத்தில் திருத்தம் செய்து கஞ்சாவை மீண்டும் போதைப் பொருளாக வகைப்படுத்த வேண்டுமென, தமது தரப்பு சுகாதார அமைசுக்கு உத்தரவிட்டுள்ளதாக, தாய்லாந்து பிரதமர் ஸ்ரீத்தா தாவிசின் (Srettha Thavisin) தனது X சமூக ஊடகம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கும் விதிமுறைகளை அமைச்சு உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
தாய்லாந்தில் முந்தைய அரசாங்கத்தின் கீழ், 2018-ஆம் ஆண்டு மருத்துவ பயன்பாட்டிற்காகவும், 2022-ஆம் ஆண்டு பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காகவும் கஞ்சா அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.