
கோலாலம்பூர், மார்ச் 13 – கடந்தாண்டு மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட் தொகையில் பயன்படுத்தப்படாத மீதத் தொகையை, அரசாங்கம் மீண்டும் இவ்வாண்டு இந்திய சமூக உருமாற்றுத் திட்டங்களை மேற்கொள்ள திரும்ப வழங்குமா என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கேள்வி எழுப்பினார்.
கடந்தாண்டு மித்ரா –மலேசிய இந்தியர் சமூக உருமாற்றுத் திட்டத்துக்கு 10 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்ட வேளை , அந்த தொகையில் 6 கோடி ரிங்கிட் மட்டுமே திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பயன்படுத்தப்படாத அந்த மீத 4 கோடி ரிங்கிட் இவ்வாண்டு ஒதுக்கீட்டுடன் சேர்த்து வழங்கப்படுமா என குலசேகரன் வினவினார்.
அதோடு இந்திய சமூக மேம்பாட்டுக்காக தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கும் குறுகிய – நீண்ட கால திட்டங்கள் குறித்து தகவல் வழங்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அந்த திட்டங்கள் Indian Bluprint எனப்படும் இந்தியர் பெருந்திட்டத்தி உள்ள நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்குமா என அவர் வினவினார்.
இன்று மக்களவையில், செயற்குழு நிலையிலான 2023 வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதத்தின் போது , குலசேகரன் இந்த கேள்விகளை முன் வைத்தார்.