
மியாமி, ஆகஸ்ட்டு 20 – கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த லொலிடா எனும் திமிங்கலம் மடிந்த செய்தியை மியாமி நீர் வாழ் பூங்கா உறுதிப்படுத்தியுள்ளது.
விலங்கு நல ஆர்வலர்களின் தொடர் நெருக்குதலால், விரைவில் கடலில் கொண்டு விடப்படவிருந்த அந்த திமிங்கிலம் மடிந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்த அந்த திமிங்கிலம், கடந்த வெள்ளிக்கிழமை மாலை வாக்கில் திடீரென மடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
57 வயது லெலிடா, நீர்வாழ் உயிரினங்கள் பூங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மிகவும் வயதான திமிங்கிலம் ஆகும்.
1970-ஆம் ஆண்டு, நான்கு வயதாக இருந்த போது, சியாட்டிலுள்ள (Seattle), புகெட் சவுண்டில் (Puget Sound) எனும் நீரிணைப் பகுதியிலிருந்து லொலிடா பிடிபட்டது.
முதலில் Hugo எனும் ஜோடியுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த லொலிடா, 1980-ஆம் ஆண்டு Hugo மடிந்ததும் தனிமையானது.
லொலிடாவை மீண்டும் அதன் பூர்வீக இடத்திலேயே சுதந்திரமாக விட வேண்டுமென, கடந்த சில வருடங்களாக விலங்கு நல ஆர்வலர்கள் முன் வைத்து வந்த கோரிக்கைக்கு எற்ப, விரைவில் அதற்கு “விடுதலை” வழங்கப்படுமென, கடந்த மார்ச்சில் அதிகாரிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.