Latestமலேசியா

ஒரு கிளாஸ் ‘மைலோ பானாஸ்’ 16 வெள்ளியா? அமைச்சு விசாரிக்கும்!

ஜொகூர் பாரு, பிப்ரவரி 18 – ஜொகூர்பாருவில் ஒரு கிளாஸ் ‘மைலோ பானாஸ்’ பானத்தை 16 வெள்ளிக்கு விற்றதாக சர்ச்சையில் சிக்கிய உணவகத்தை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரிக்கவுள்ளது.

இதுவரை அது குறித்து அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை; சமூக ஊடகங்களில் தான் பகிரப்பட்டு வருகிறது; என்றாலும் தாங்கள் நிச்சயம் அச்சம்பவத்தை விசாரிப்போம் என அமைச்சின் மாநில இயக்குநர் சஸ்லிண்டா போர்னோமோ சொன்னார்.

பிப்ரவரி 14-ஆம் தேதி சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட ரசீதை வைத்துப் பார்த்தால், அச்சம்பவம் கோத்தா திங்கி டெசாரு கடலோர உல்லாசத் தலமொன்றின் உணவகத்தில் நிகழ்ந்திருக்கிறது.

2011 விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டத்தின் கீழ் அவ்வுணகத்தின் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

அதிக ஆதாயம் பார்க்கும் வகையில் அவ்வுணவகம் செயல்பட்டதா? சம்பவத்தின் போது அங்கு வாடிக்கையாளர்களின் பார்வைக்கு விலைப்பட்டியல் வைக்கப்பட்டதா இல்லையா என்பதை முதல் கண்டறிய வேண்டியிருக்கிறது.

அப்படி அந்த அம்சங்கள் உறுதிச் செய்யப்பட்டால், அடுத்தக் கட்டமாக அதே உணவக நடத்துனருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்படும்; அதன் பிறகே நடவடிக்கை முடிவாகும் என சஸ்லிண்டா சொன்னார்.

விசாரணைக்கு புகார்தாரரும், உணவர நடத்துனரும் ஒத்துழைக்க வேண்டும்; அப்போது தான் ஒரு நியாயமான தீர்வுக்கு வர முடியும் என்றார் அவர்.

இவ்வேளையில், இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் போது மக்கள், சமூக ஊடகங்களுக்குப் போவதற்கு பதிலாக முதலில் அது குறித்து நேரடியாக தங்களுக்கு புகார் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஒரு கிளாஸ் சூடான மைலோவுக்குக் கட்டணமாக 15 வெள்ளி 90 காசு வசூலிக்கப்பட்டதைக் காட்டும் ரசீது முன்னதாக Emoncs Tay என்ற முகநூல் பக்கத்தில் பதிவற்றப்பட்டது வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!