கோலாலம்பூர், பிப் 8 – மக்களின் பாதுகாப்புக்காக உழைக்கும் போலீஸ் அதிகாரிகளின் வேலை எளிதல்ல. பணியின்போது பல கஷ்டமான, ஆபத்தான தருணங்களை அவர்கள் அடிக்கடி சந்திப்பர்.
அதுபோன்று, சுட்டெறிக்கும் வெயிலில் கடமையைச் செய்யும் போலீஸ் அதிகாரிகளை நாம் தினந்தோறும் பார்த்து, கடந்து செல்கின்றோம். சில நேரங்களில் இவ்வளவு கடுமையான வேலையை செய்கின்றனர் என எண்ணி, அடுத்த கணம் நமது வேலையில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவோம்.
ஆனால், inforoadblock எனும் அகப்பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் காணொளி, சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த காணொளியில், சாலை பிரியும் பகுதியில் அமர்ந்திருந்து, வேகமாக செல்லும் வாகனங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் போலீஸ் போக்குவரத்து அதிகாரிக்கு, இளைஞர் ஒருவர் குடிக்க பானத்தை கொடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.
அந்த இளைஞர் செய்த உதவி ஒன்றும் பெரிதல்ல, ஆனால் , சுற்றியுள்ளவர்களின் நிலைமையைப் புரிந்து உதவும் எண்ணம் இளம் தலைமுறையினர் மத்தியில் இருப்பது கண்டு பூரிப்படைவதாக , வலைத்தளவாசிகள் பதிவிட்டிருக்கின்றனர்.