புத்ரா ஜெயா, மே 8 – பேரா , லுமுட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது தொடர்பான முன்னோடி அறிக்கையை தற்காப்பு அமைச்சு நாளை வெளியிடவிருக்கிறது. 10 பேர் உயிரிழந்த அந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த முழுமையான அறிக்கை இன்னும் 2 அல்லது மூன்று வாரங்களில் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார். முன்னோடி அறிக்கை நாளை பிரசுரிக்கப்படும் என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ Muhamad Khaled Nordin அமைச்சரவையிடம் தெரிவித்திருக்கிறார். இது ஒரு தொடக்க அறிக்கைதானே தவிர அந்த விபத்து குறித்து முழுமையான அறிக்கை அல்ல என இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Fahmi Fadzil கூறினார்.
அரச மலேசிய கடற்படையின் 90 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்கான ஒத்திகையில் கலந்துகொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் ஏப்ரல் 24ஆம்தேதி மோதிக்கொண்ட விபத்தில் ஏழு விமான ஊழியர்களும் மூன்று பயணிகளும் மரணம் அடைந்தனர். அந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக சிறப்பு விசாரணைக் குழுவையும் அரச மலேசிய கடற்படை அமைத்தது.