மஞ்சோங், ஏப் 25 – ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அரச மலேசிய கடற்படையின் அதிகாரிகளில் ஒருவரான லெப்டனன் T. சிவசுதனின் உடல் அரச மலேசிய கடற்படை வீரர்களின் முழு மரியாதையுடன் இன்று நண்பகல் மணி 12.15 அளவில் மஞ்சோங் இந்து சபா மயானத்தில் இறுதிச் சடங்கிற்கு பின் தகனம் செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக சித்தியவானில் செர்டாங் ஜெயாவிலுள்ள சிவசுதனின் வீட்டில் இன்று காலை 9 மணி முதல் 11மணிவரை இறுதிச் சடங்கு நடைபெற்றது. மறைந்த சிவசுதனுக்கு அறிமுகமான அவரது நண்பர்கள், கடற்படை அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ,உறவினர்கள் என பலர் திரளாக அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
மலேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கையோடு லுமுட் அரச மலேசிய கடற்படை தளத்தில் பணியாற்றி வந்த 31 வயதுடைய லெப்டனன் சிவசுதன் உட்பட 10 பேர் செவ்வாய்க்கிழமையன்று காலையில் லுமுட்டில் கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தனர். இதனிடையே சிவசுதனின் மறைவு எங்களது குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதோடு இதனை ஏற்றுக்கொள்வதற்கு எங்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என அவரது தந்தையான 61 வயதுடைய
M . Thanjappan கண்ணீர் மல்க தெரிவித்தார். எனது மகன் இறை பத்தியை கொண்டவர், மற்றவர்களுக்கு உதவும் நல்ல மனம் எப்போதும் இருந்து வந்தது. . பெற்றோர்களின் பேச்சுக்கு அவர் எப்போதும் மறுப்பு கூறியது கிடையாது. எங்கள் குடும்பத்தின் ஒரே மகனாக இருந்ததால் எங்களது கோரிக்கைக்கு எப்போதும் செவிசாய்க்கக் கூடிய நல்ல மகனாக திகழ்ந்தார். நானும் எனது மனைவியும் இதுதான் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறினால் அதனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்வார் என Thanjappan கூறினார்.
Tik Tok கில் அவரது அம்மா எதாவது நல்ல விஷயத்தை பார்த்தால் நாளையே அதனை சிவசுதன் அவருக்கு அனுப்பி விடுவார் என தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது Tanjappan தெரிவித்தார். தமது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அடையாளமாக சிவசுதன் எப்போதும் திகழ்ந்து வந்தார். என் கண்ணின் மணியாக இருந்து அவரது மறைவினால் எங்களுக்கு இருந்த மகிழ்ச்சி எல்லாம் எங்களிடமிருந்து தொலைந்து போய்விட்டது என துக்கம் தாளமுடியாமல் Thanjappan தெரிவித்தார்.