
கோத்தா பாரு, மே 14 – தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் மற்றும் வறட்சி காலத்தால் ஏற்பட்ட வெப்பத்தாக்கத்தால் நாட்டில் 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த வெயில் மற்றுக் வறட்சிக் காலத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார துணை அமைச்சர் லுகானிஸ்மான் அவாங் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் பெரியவர்களை உள்ளடக்கிய இந்த வெப்பத் தாக்கத்தால் 6 பேர் கிளந்தானிலும், 5 பேர் சரவாக்கிலும், மூவர் சபாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 14 பேரில் 11 வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்திருப்பதாகவும் துணையமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிலை தற்போது கட்டுபாட்டில் இருந்தாலும், அனைத்து மருத்துவமனைகளும் வெப்பத் தாக்கம் சம்பந்தப்பட்ட அவசர நிலையைச் சந்திக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும்படி துணையமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயத்தில், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுடன் சேர்ந்து இந்த வறட்சி காலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த விளம்பரங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.