
சுபாங் ஜெயா, நவ 6 – கடுமையாக மழை பெய்ததைத் தொடர்ந்து சுபாங் பேரட் (Subang Parade) வர்த்தக தொகுதியில் நேற்று மாலை மணி 4 அளவில் அந்த வர்த்தக தொகுதியின் கீழ்த்தளத்தில் உள்ள கடைகளில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள வர்த்தகர்களும் பொருட்களை வாங்க வந்த பயனீட்டாளர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அந்த வர்த்தக தொகுதியின் கீழ்த்தளத்திலும் கார் நிறுத்தும் இடத்திலும் வெள்ளம் ஏற்பட்டதை காட்டும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின. பொருட்களை வாங்குதவற்கு சுபாங் பேரட்டிற்கு சென்றதாகவும் சிறிது நேரத்தில் அபாய மணி அடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக சமூக வலைத்தள பயனர் ஒருவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அந்த வர்த்தக மையத்தின் கீழ்த்தளத்தில் வியாபாரம் செய்வோர் தங்கள் கடைகளை சுத்தம் செய்யும் காணொளியும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டன. பொருட்களை வாங்க வந்தவர்கள் பாதுகாப்பான வழியில் தங்களது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.