கோலாலம்பூர், அக்டோபர்-2, திருமணத்திற்கு சகல வித ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்து, ஊரே கூடி வந்து ஆசிர்வதிக்க காத்திருக்கும் போது, கடைசி நேரத்தில் மணமகனோ அல்லது மணமகளோ மண்டபத்திற்கு வரவில்லை என்றால் எப்படியிருக்கும்?
அப்படி ஒரு துர்பாக்கியமான சம்பவம் தான் டிக் டோக்கில் வைரலாகி, மணமகனுக்கு அனுதாபங்களும் உற்சாக வார்த்தைகளும் குவிந்து வருகின்றன.
அவ்வீடியோவில், மணமகள் இல்லாமல், மணமகன் மட்டும் தனியாக குடும்ப உறுப்பினர்களோடு மண்டபத்தினுள் அழைத்து வரப்படுகிறார்.
மணமகன் வீட்டார் சோகம் தோய்ந்த முகத்தோடு இருப்பதும், சிலர் கண் கலங்குவதையும் காண முடிகிறது.
மணமகள், கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தியதே அதற்குக் காரணமாகும்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதால், கடைசி நேரத்தில் ஒவ்வொருவராக அழைத்து திருமணம் நின்று விட்ட தகவலைக் கூற வாய்ப்பில்லை.
எனவே, திட்டமிட்டப்படி திருமண உபசரிப்பை நடத்தி விருந்தினர்களை கவனிப்பது என, மிகவும் தர்மசங்ககடமான ஒரு முடிவை மணமகனின் குடும்பம் எடுத்துள்ளது.
“எல்லாம் கடவுளின் சித்தம், எங்களின் சோகம் உங்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கக் கூடாது; சந்தோஷமாக விருந்துண்ணுங்கள்” என மணமகனான அடாம் (Adam) விருந்தினர்கள் முன்னிலையில் நிதானமாக உரையாற்றி, வந்ததற்கு அவர்களுக்கு நன்றி கூறியது, வலைத்தளவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியது.
அவ்வீடியோவுக்கு இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ள நிலையில், பார்ப்பவர்கள் வார்த்தைகளால் அவ்வாடவரைத் தேற்றி வருகின்றனர்.