தெமர்லோ, செப்டம்பர் -15 – பாஸ் கட்சியின் உறுப்பியம் தற்போது முஸ்லீம் அல்லாதோருக்கும் திறக்கப்பட்டுள்ளது.
Ahli Besekutu அதாவது இணை உறுப்பினர் என்ற அந்தஸ்தில் முஸ்லீம் அல்லாதோர் இனி அந்த இஸ்லாமியக் கட்சியில் சேரலாம்.
பஹாங், தெமர்லோவில் நடைபெற்று வரும் அக்கட்சியின் 70-ம் ஆண்டு பொதுப் பேரவையில் சட்ட விதிகள் திருத்தப்பட்டதை அடுத்து அது சாத்தியமாகியுள்ளது.
1,324 பேராளர்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை ஆதரவோடு அச்சட்டத் திருத்தம் நிறைவேறியது.
முஸ்லீம் அல்லாத உறுப்பினர்கள் வேறு எந்த மதத்தைச் சார்ந்தவராகவும் இருக்கலாம்.
ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதிகளுக்கு மட்டும் கட்சியில் இடமில்லை என, பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் (Takiyuddin Hassan) கூறினார்.
பாஸ் கட்சியில் முஸ்லீம் அல்லாதோர் இதற்கு முன் பாஸ் ஆதரவாளர் மன்றம் (Dewan Himpunan Penyokong Pas) என்ற பிரிவு வாயிலாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அங்கத்தினராகும் வாய்ப்பை அவர்கள் பெற்றுள்ளனர்.