கோலாலம்பூர், ஜூன் 13 – கட்சி தாவல் தடுப்பு மசோதா விவகாரம் தொடர்பில் பிரதமர் Ismail Sabri Yaakob அவர்களை சந்திப்பதற்கு பக்காத்தான் ஹராப்பான் திட்டமிட்டுள்ளது. அந்த உத்தேச மசோதாவை தாக்கல் செய்வது மற்றும் அது குறித்து விவாதிப்பதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை அரசாங்கம் நடத்தத் தவறியதால் பக்காத்தான் ஹரப்பான் ஏமாற்றம் அடைந்ததைத் தொடர்ந்து பிரதமருடன் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் வாரத்தில் கட்சித் தாவல் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் எதிர்பார்க்கிறது.
அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பக்காத்தான் ஹராப்பானுக்கும் அரசாங்கத்திற்குமிடையே இணக்கம் காணப்பட்ட 18 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு உடன்பாட்டில் 15அம்சங்கள் அல்லது 83 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுவிடும். மேலும் பிரதமர் இரண்டு தவணைக் காலத்திற்கு அல்லது 10 ஆண்டுகளுக்கு மட்டுமே பதவியில் நீடிப்பதை வரையறுப்பது உட்பட இதர மூன்று அம்சங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் என்பதையும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் சுட்டிக்காட்டியது.