
கோலாலம்பூர், நவம்பர் 1 – சுபாங் ஜெயா, USJ 21-ரில் அமைந்திருக்கும் கட்டடம் ஒன்றின் மேல் பகுதியில், நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன் தண்ணீரில், மூன்று வங்காளதேச தொழிலாளர்கள், குளித்து, உடைகளை துவைக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த 19 வினாடி காணொளி பரவலாக பகிரப்பட்டு வருவதோடு, கண்டனமும் எழுந்துள்ளது.
அந்த கட்டடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் என நம்பப்படும் மூன்று வங்காளதேச பணியாளர்கள், தாங்கள் பதிவுச் செய்யப்படுகிறோம் என்பதை கூட அறியாமல், கொள்கலன் தொட்டியை திறந்து, நீரை அல்லி ஊற்றி குளிக்கின்றனர்.
அவர்கள் குளிக்கும் சவர்க்கார நீர் மீண்டும் அதே தொட்டியில் விழும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
அச்சம்பவம் ஒன்றும் புதிதல்ல, அப்பகுதியில் அதுப்போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக, அந்த காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் செயலை சாடும் இணையப் பயனர்கள் அது தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதற்காக, அந்த காணொளியை பதிவுச் செய்த நபர் முன் வந்து போலீஸ் புகார் செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.