
காஜாங், பிப் 1 – காஜாங் தமிழ்ப் பள்ளியின் புளோக் B கட்டிடத்தின் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்காக 100,000 ரிங்கிட் சிறப்பு மான்யத்தை தாம் அங்கீகரித்திருப்பதாக கல்வித்துறை துணையமைச்சர் Lim Hui Ying தெரிவித்தார். இந்த மான்யத்தை பயன்படுத்தி அந்த பழமையான கட்டிடத்தை சீரமைப்பு செய்வதன் மூலம் அங்கு புதிய வகுப்பறைகளை உருவாக்க முடியும் என Lim Hui Ying கூறினார். இன்று காலையில் காஜாங் தமிழ்ப் பள்ளிக்கு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சிறந்த பள்ளிகளில் காஜாங் தமிழ்ப்பள்ளியும் ஒன்று என தமக்கு தெரிவிக்கப்பட்டதால் இன்று அந்த பள்ளியை தாம் பார்வையிட வந்ததாக அவர் கூறினார். அந்த பள்ளியின் அடைவு நிலை மற்றும் பள்ளி எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து அதன் தலைமையாசிரியர் விஜயலட்சுமி தமக்கு விளக்கம் அளித்தாகவும் Lim Hui Ying தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளுக்கு மான்யம் வழங்கப்பட வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் இந்திய தலைவர்கள் அண்மையில் கல்வி அமைச்சர் Fadhlina Sidek கிற்கு மகஜர் கொடுத்திருப்பதை தாம் அறிந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தை அமைச்சர் கவனிப்பார் என்றும் Lim Hiu Ying தெரிவித்தார்.
இதனிடையே 1,030 மாணவர்கள் பயிலும் காஜாங் தமிழ்ப்பள்ளி இடம் பற்றாக்குறை பிரச்சனை எதிர்நோக்குவதை அப்பள்ளியின் மேலாளர் வாரிய உறுப்பினர் சுதானந்தன் ஒப்புக்கொண்டார். இரண்டு மாடியைக் கொண்ட புளோக் F பழைய கட்டிடம் என்பதால் அதில் அடிப்படை வசதி எதுவும் கிடையாது. எனினும் அந்த கட்டிடத்தை புதுப்பிப்பதன் மூலம் அக்கட்டிடத்தின் முதல் மாடியில் ஆறு வகுப்புகளையும் கீழ் மாடியில் மேலும் ஆறு வகுப்புகளையும் திறக்க முடியும் என காஜாங் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுதானந்தன் கூறினார். இவ்வாண்டு முதல் வகுப்பில் பயில்வதற்கு 600க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.