Latestமலேசியா

மித்ராவின் நிதியுதவி மான்யங்களை பரிசீலிப்பதில் பெமாண்டு ஆலோசனை நிறுவனம் சம்பந்தப்படாது -அமைச்சர் ஏரோன் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 14 – மித்ராவின் நிதியுதவி மற்றும் அதன் மான்யங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களிடம் மனுவை பரிசீலித்து முடிவு செய்யும் நடவடிக்கையில் பெமாண்டு ஆலோசனை நிறுவனம் ஈடுபடாது என ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஏரோன் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி முதல் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் மித்ரா கொண்டுவரப்பட்டது. சரியான திசையை நோக்கி மித்ராவின் நிர்வாகம் மற்றும் அதன் நோக்கமும் இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்புகள்,இளைஞர் அமைப்புகள் மற்றும் தொழில் துறையின் முக்கிய பிரமுகர்களுடன் மித்ராவின் புதிய திசைக்கான பட்டறை ஒன்றை ஒற்றுமைத்துறை அமைச்சு ஏற்பாடு செய்யவிருக்கிறது.

இதனை கருத்திற்கொண்டு செயல் முறை திட்டம் தொடர்பான நிர்வாக மற்றும் ஆய்வுப் பட்டறையை நடத்துவதற்காக PEMANDU என்ற ஆலோசனை நிறுவனத்தை ஒற்றுமைத்துறை அமைச்சு நியமித்துள்ளதாக அவர் கூறினார். இந்த ஆலோசனை நிறுவனத்திற்கு மித்ராவின் மான்யம் வழங்கப்பட்டதாக கூறப்படுவதை மறுப்பதாக ஏரோன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

மாறாக தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் நடவடிக்கையின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இந்த ஆலோசனை நிறுவனத்திற்கான கட்டணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மித்ராவில் மான்யம், உதவி நிதிக்கு மனுச் செய்தவர்களின் விண்ணப்பங்களை PEMANDU ஆராய்ந்து பரிசீலிக்கும் என்ற கூறுப்படுவதையும் தாம் மறுப்பதாக ஏரோன் கூறினார்.

மித்ராவுக்கான புளு பிரிண்ட் அல்லது நீல அறிக்கை எனப்படும் செயல் திட்ட அறிக்கையை எளிதாக்கும் அமைச்சின் நடவடிக்கைக்காகவே பட்டறை மற்றும் கலந்துரையாடலை PEMANDU கவனிக்கும். மேலும் PEMANDU ஆலோசனை நிறுவனம் அமைக்கப்பட்டதால் மித்ராவின் தலைவர் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் மற்றும் அவரது பணிக்குழுவின் பங்கை புறக்கணிப்பதாக அல்லது அவர்களின் பங்கை அலட்சியப்படுத்துவதாக அர்த்தம் இல்லை.

மித்ராவின் தலைவரும் அதன் பணிக்குழு உறுப்பினர்களும் இதற்கு முன் PEMANDU வுடன் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டனர். பிரபகாரன் மற்றும் மித்ராவின் சிறப்பு பணிக்குழு உறுப்பினர்கள் மித்ராவின் விவகாரத்தில் அவர்களின் பங்கேற்பை தாம் எப்போதும் வரவேற்பதாகவும் ஏரோன் தெரிவித்தார்.

தற்போது மித்ராவின் செயல்பாடு மற்றும் அதன் நடவடிக்கை குறித்து ஒற்றுமைத்துறை அமைச்சு ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இவ்வாண்டு மார்ச் 13ஆம் தேதிவரை மித்ராவின் ஆய்வு தொடர்பில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற பிரதிநிதிகளில் நால்வர் மட்டுமே தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக்கான நுழைவு பாரத்தை பூர்த்தி செய்து அவர்கள் அனுப்பியுள்ளனர். இந்த ஆய்வு பாரத்தில் தெரிவிக்கப்பட்ட அனைத்து கருத்துக்களும் பட்டறையின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே மித்ராவின் செயல் நடவடிககை மற்றும் அதன் திசைக்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பார்கள் என்றும் ஏரோன் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!