
வாஷிங்டன், செப்டம்பர் 23 – அமெரிக்காவில், அலிசியா பாக்ஸன் எனும் பெண் ஒருவர் தனது கணவரின் மரணத்துக்குக் கூகுள் மேப்ஸ் (Google Maps) தான் காரணம் எனக் கூறி, தொழிநுட்ப ஜாம்பவான் ஆன அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம், அலிசியாவின் கணவர் பிலிப் பாக்ஸ்சன் செலுத்திய கார் சேதமடைந்த பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்ததில், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நோர்த் கெரோலைனாவிலுள்ள அந்த பாலம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னரே இடிந்து விழுந்து விட்டது.
எனினும், கூகுள் மேப்ஸ்-சில் அந்த விவரம் எதுவும் புதுப்பிக்கப்படவில்லை.
47 வயது பிலிஸ் அப்பகுதிக்கு சென்றது அதுவே முதல் முறை என்பதால், பாலம் இடிந்த தகவல் எதுவும் அவருக்கு தெரியாது.
அதனால், இருள் சூழ்ந்த இரவு நேரத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலுடன் அந்த பாலத்தில் பயணித்த பிலிப்ஸ் ஆற்றில் விழுந்து உயிரிழந்தாக அலிசியா கூறியுள்ளார்.
அதனால், அலட்சியமாக செயல்பட்டு தனது கணவரின் இறப்பிற்குக் காரணமாக இருந்த கூகுள் மேப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக அலிசியா வழக்கு தொடுத்துள்ளார்.
GPS திசைகளுக்குப் பொறுப்பானவர்கள், எப்படி மனித உயிரை உட்படுத்திய விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியும் என்பது தமக்கு விளங்கவில்லை எனவும் அலிசியா தனது மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வேளையில், அலிசியாவின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், அந்த வழக்கைப் பரிசீலிப்பதாக கூறியுள்ளது.