
புத்ராஜெயா, மார்ச்-20 – காணாமல் போன MH370 விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் தொடங்கும் முயற்சியில், பிரிட்டனைச் சேர்ந்த Ocean Infinity நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசிய அரசாங்கம் சார்பில் போக்குவரத்து அமைச்சு அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடும் என,
அமைச்சர் அந்தோணி லோக் அறிக்கையொன்றில் கூறினார்.
“கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், கட்டணம் இல்லை” என்ற ஏற்பாட்டின் கீழ் இந்தியப் பெருங்கடலின் தெற்கே சுமார் 15,000 சதுர கிலோமீட்டரை, தேடலுக்கான புதிய பகுதி உள்ளடக்கியிருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், MH370 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், மலேசிய அரசாங்கம் Ocean Infinity நிறுவனத்திற்கு 310 மில்லியன் ரிங்கிட் கட்டணத்தைச் செலுத்தும்.
தேடலைத் தொடரவும், MH370 பயணிகளின் குடும்பங்களுக்கு ஓர் இறுதி முடிவை வழங்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என அந்தோணி லோக் கூறினார்.
2014 மார்ச் 8-ஆம் தேதி 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் MH370 மர்மமான முறையில் காணாமல் போனது.
பத்தாண்டுகளாக பல தேடல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், விமானத்தின் பாகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதே ‘No Find No Fee’ இணக்கத்தின் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு Ocean Infinity மேற்கொண்ட தேடல் பணிகள், கடைசியில் விமானத்தைக் கண்டுபிடிக்காமலேயே முடிந்தது நினைவிருக்கலாம்.