
கோலாலம்பூர், ஜன 6 – இனி கண்ணதாசன் அறவாரியம், மாதந்தோறும், தமிழ் சமுதாயத்தை ஒன்றிணைக்கவும், தமிழர்களின் பண்பாட்டு பெருமையை எடுத்துரைக்கவும், மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது.
அதன் முயற்சியாக இவ்வாண்டின் முதல் இலக்கிய நிகழ்ச்சியாக, ‘பாட்டுடைத் தலைவன்’ எனும் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியிருப்பதாக, கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
பாட்டுடைத் தலைவன் எனும் தலைப்பில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றுவதற்காக, தமிழகம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் மு. அப்துல் சமது வரவழைக்கப்பட்டிருந்தார்.
இலக்கிய அமுதைப் பருக வைத்த இந்த நிகழ்ச்சி தமிழர்களை ஒன்றிணைத்திருப்பதைக் கண்டு தாம் நெகிழ்ச்சி அடைந்திருப்பதாக அப்துல் சமது தெரிவித்தார்.
நேற்று மாலை, தலைநகர் மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய சொற்பொழிவில் இலக்கிய – தமிழ் ஆர்வலர்கள் திரண்டு கலந்து கொண்டனர்.