Latestமலேசியா

கத்தோலிக்கப் பெண் இஸ்லாத்துக்கு மதம் மாறியது செல்லாது; பினாங்கு உயர் நீதிமன்றம் அதிரடி

பினாங்கு, ஏப்ரல் 16 – தாம் இஸ்லாத்துக்கு மதம் மாறியது செல்லாது என அறிவிக்கக் கோரும் முயற்சியில், சபாவைச் சேர்ந்த கத்தோலிக்க இளம் பெண்ணொருவர் வெற்றிப் பெற்றுள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்த முஸ்லீம் ஆடவருடனான உறவு முறிந்து விட்டதால், தாம் மதம் மாறியது இனியும் செல்லாது என 21 வயது அப்பெண் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

2020-ல் மதம் மாறிய போது தமக்கு 17 வயது தான் என்றும், பெற்றோரின் ஒப்புதலோடு அது நடக்கவில்லை என்றும் மூருட் பழங்குடியினத்தைச் சேர்ந்த அப்பெண் சுட்டிக்காட்டியிருந்தார்.

சட்டப்பூர்வமான திருமணத்திற்கு மதமாற்றம் கட்டாயம் அவசியம் என தனது அப்போதையக் காதலன் சொன்ன ஒரே காரணத்திற்காகவே, மதம் மாறிட அப்பெண் சம்மதித்துள்ளார்.

இப்போது காதலனே இல்லையென்று ஆகி விட்ட பிறகு தாம் மதம் மாறியது எப்படிச் செல்லும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

2022-ஆம் ஆண்டு இருவருக்கும் இடையிலான உறவு முறிந்து, தாம் முஸ்லீம் என்பதை ரத்துச் செய்ய அப்பெண் பல முறை முயற்சி மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து தான் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.

வழக்கை விசாரித்த பினாங்கு உயர்நீதிமன்ற நீதிபதி Quay Chew Soon, மதம் மாறிய போது அப்பெண் வயதுக் குறைந்தவர் என்பதால், தாய் – தந்தை என இருவரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் அப்படி செய்யப்படவில்லை என்பதால் அப்பெண்ணின் மதமாற்றம் தொடக்கத்தில் இருந்தே செல்லாது; எனவே, அவர் இன்னமும் கத்தோலிக்கரே என அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.

அதோடு, தற்போது பினாங்கில் உணவகப் பணியாளராக இருக்கும் அப்பெண்ணின் விவரங்களை Mualaf பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கிவிடுமாறு மாநில இஸ்லாமிய மன்றத்தையும் Mualaf பதிவதிகாரியையும் நீதிபதி உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!