துபாய், ஏப்ரல்-17, அனைத்துலகப் பயணங்களுக்கு உலகின் மிக பரபரப்புமிக்க விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் வந்திறங்கும் விமானங்கள், கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிமாக வேறு இடங்களுக்கு மாற்றி விடப்பட்டன.
முன்னதாக, மோசமான வானிலை காரணமாக விமான நிலைய செயல்பாடுகள் 25 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
குறைந்தது 21 புறப்படும் மற்றும் 24 வந்திறங்கும் விமானங்கள் பகலில் ரத்துச் செய்யப்பட்டன; மேலும் மூன்று விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இடையூறுகள் இருந்தபோதிலும், புறப்படும் விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
வானிலை சீராகும் வரை உள்வரும் விமானங்கள் திருப்பி விடப்படும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று 120 மில்லி மீட்டர் அல்லது 4.7 அங்குல அளவில் அங்கு மழைக் கொட்டித் தீர்த்தது.
இது அந்த பாலைவன தேசத்தின் வழக்கமான வருடாந்திர சராசரியாகும்.
இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய வேளை, பகுதியளவு நீரில் மூழ்கிய கார்கள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன.
கனமழையால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலைச் செய்யுமாறு ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளன.
துபாய் அனைத்துலக விமான நிலையத்தின் தார் சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது.
அதைப் பார்க்க ஏதோ ஏரி பக்கமாக விமானங்கள் வந்து தரையிறங்குவது போல் வைரலான காணொலிகளில் தெரிகிறது.