
கோலாலம்பூர், மார்ச் 21 – சில நேரங்களில் பிறர் என்ன கஷ்டத்தில் இருக்கிறார் என்பது நமக்கு தெரியதில்லை. உள்ளுக்குள் ஏதோ ஒரு வேதனையுடன் போராடிக் கொண்டிருக்கலாம்.
அத்தகைய நேரத்தில் ஒருவர் செய்யும் அன்பான ஒரு செயல் அவர்கள் வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது என்கிறார் 44 வயதான ஆர். யோகேஸ்வரி.
ஈப்போ, Raja Permaisuri Bainun மருத்துவமனையில் பாதுகாவலராக வேலை செய்து வரும் யோகேஸ்வரி , அண்மையில் பேரா மாநில அளவிலான மகளிர் தின கொண்டாட்டத்தின் போது, “ Sejahtera Wanita’ எனும் விருதினைப் பெற்றார்.
அந்த விருதினை அவர் பேராக் மெந்திரி பெசார் Datuk Seri Saarani Mohamad – டிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளையும் வருகையாளர்களையும் யோகேஸ்வரி கனிவாக வரவேற்று உதவி செய்த காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டது.
நோயாளிகளின் காரை திறந்து விடுவது, நோயாளி வந்து ஏறும் வரை மின் தூக்கியை திறந்து வைத்திருப்பது , மருத்துவமனை வளாகத்தில் போக்குவரத்தை கட்டுப்படுத்த உதவுவது போன்ற தனது எளிய பரிவுமிக்க செயலால் பலரது பாராட்டினைப் பெற்றிருக்கின்றார் யோகேஸ்வரி.