கோலாலம்பூர், ஆகஸ்ட்-30 – கோலாலம்பூர், கம்போங் கெரிஞ்சி, ஜாலான் பந்தாய் பெர்மாயில் அண்மையில் கால்வாய் உள்வாங்கிய சம்பவத்திற்கு, பொது கழிவுநீர் குழாய் காரணமல்ல.
Indah Water Konsortium அதனைத் தெளிவுப்படுத்தியுள்ளது.
அந்த திடீர் பள்ளம் குறித்து DBKL-லிடமிருந்து புகார் கிடைத்ததை அடுத்து, அங்கு சோதனை மேற்கொண்டோம்;
ஆனால், கழிவு நீர் குழாய்கள் நன்றாகவே செயல்படுவதும், கழிவு நீரோட்டத்தில் பிரச்னை எதுவும் இல்லையென்றும் உறுதிபடுத்தப்பட்டதாக Indah Water கூறியது.
மேற்கொண்டு CCTV வாயிலாக நேற்று மதியம் பரிசோதித்ததில் கழிவு நீர் குழாய்களில் சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை.
விசாரணை அறிக்கையை DBKL-லிடம் சமர்ப்பித்திருப்பதாகக் கூறிய Indah Water, அந்த நில அமிழ்வுக்கு வேறு காரணங்கள் இருந்திருக்கக் கூடும் என்றது.
அதை சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்கள் தான் விசாரித்து கண்டறிய வேண்டுமென அந்த கழிவுநீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது.
திங்கட்கிழமை திடீர் பள்ளமேற்பட்டு அக்கால்வாய் இடிந்து விழுந்தததை அடுத்து, பாதுகாப்புக் கருதி அப்பகுதியை DBKL மூடியுள்ளது.
கோலாலம்பூரில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட 3 நில அமிழ்வுச் சம்பவங்களில் இந்த கெரிஞ்சி கால்வாய் இரண்டாவது சம்பவாகும்.
முதல் சம்பவம் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்து, அதில் சிக்கிக் கொண்ட இந்தியப் பிரஜையைத் தேடும் பணிகள் எட்டாவது நாளாகத் தொடருகின்றன.
அவ்விடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் சில தினங்களுக்கு முன் சிறிய அளவில் மற்றொரு பள்ளம் தோன்றியது.
எனினும் அவ்விரண்டுச் சம்பவங்களிலும் எவரும் காயமடையவில்லை.