
கோலாலம்பூர், பிப் 2- கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு மலேசியாவின் முன்னாள் கராத்தே வீரரான பி.அறிவழகன் டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார். சீ போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி உட்பட பல்வேறு அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களை வென்று மலேசியாவுக்கு பெருமை சேர்ந்த அறிவழகன் மலேசிய கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் பயிற்சிக்குழு இயக்குனரும் ஆவார். இஸ்தானா நெகாராவில் இன்று காலையில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா Panglima Mahkota Wilayah ( PMW ) எனப்படும் டத்தோ விருதை அறிவழகனுக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் , அவரது துணைவியார் டாக்டர் வான் அஸிஸா ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் தேசிய காற்பந்து குழுவின் முன்னாள் விளையாட்டாளரான டத்தோ லிம் தியோங் கிம், போலிங் வீராங்கனை டத்தோ ஷாலின் சுல்கிப்ளி, தேசிய உடற் கட்டழகர் டத்தோ முகமட் ஷாருல் அஸ்மான் மஹேன் ஆகியோரும் டத்தோ விருது பெற்றனர்.
இதனிடையே டத்தோஸ்ரீ எனப்படும் ( SMW ) உயரிய விருது பெற்றவர்களின் பட்டியலில் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் முகமட் சாபு முன்னணி வகித்தார். அமானா கட்சியின் தலைவருமான அவருக்கு டத்தோஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. PMW எனப்படும் டத்தோ விருதை UMW Toyota Motor நிறுவனத்தின் தலைவர் டத்தோ K. Ravindran பெற்றார்.