
கோலாலம்பூர், மார்ச் 23 – மலேசிய இந்தியர்களில் பல்வேறு சமூகங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து ஒன்றுபட்டு வாழவேண்டும் என மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் கேட்டுக்கொண்டார். இந்தியர்கள் ஒற்றுமை உணர்வோடு செயல்பட்டால்தான் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெறமுடியும் என அவர் வலியுறுத்தினார். தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்ற உகாதி புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் கலந்துகொண்டபோது சிவக்குமார் இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கெட் பிரதாப் உப்பட பலர் கலந்துகொண்டனர். ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
மலேசியர்கள் மத்தியில் சகிப்புத்தன்மை மற்றும் ஒருவருக்கு ஒருவர் உதவிடும் மனப் பக்குவம் அதிகரிக்க வேண்டும் என்றும் சிவக்குமார் கேட்டுக் கொண்டார். சிறப்பு பூசைகளுக்கு பின்னர் உகாதி புத்தாண்டு விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் கிருஸ்ணராவ் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய அறங்காவலர் டத்தோஸ்ரீ டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு மாலைகள் அணிவித்து சிறப்பித்தனர்.பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள் தலைவர்கள் லெட்சு, வெங்கடேஷ் சிறப்பிக்கப்பட்டனர்.