
கோலாலம்பூர்,மே 12- காற்றில் கரைந்திட்ட உயிர்களை தன் வயிற்றில் சேயாய் ஏற்று – ஈன்று – போற்றி பாத்துகாத்து – சேய்களின் மனங்களை வெல்பவள்தான் அன்னை என்ற முன்னெறி தெய்வம். அன்னையிடம் இறைத் தன்மையும் – குருவின் தன்மையும் ஒருங்கே அமைந்திருக்கும் தெய்வப் பிறவியாவாள் என்பதால் அன்னையை போற்றி-பேணி பாதுகாப்போம் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அன்பான அன்னையின் அன்பு மட்டுமே நிரந்தரம் என்பதனை உணர்த்துவதற்காகவே, இரவு – பகல் என்று பாராமல் அன்னையாக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கிறாள் என்று அன்னையர்களுக்கு கவிஞர் கண்ணதாசன் மகுடம் சூட்டினார்.
“காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே – காலம் இதை தவற விட்டால் தூக்கம் இல்லை மகளே” – என்று தனது தாலாட்டுப் பாடலில் தனது நிலை பிள்ளைகளுக்கும் வந்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் கவிஞர் கண்ணதாசன் அந்தப் பாடல் வரிகளை எழுதியிருப்பார். நாளை அன்னையர் தினத்தை கொண்டாடும் நாளில், அன்னையர்களை போற்றும் இளையோராக இருப்பவர்கள் அன்னையின் வழிகாட்டலில் – தடம் மாறாது – திடமோடு மேலோங்கி முன்னோக்குச் செல்லும் அதேவேளையில், அவர்களையும் பாதுகாப்போடு – அரவணைத்துச் செல்ல வேண்டுமென்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.