நாட்டின் முன்னணி கலைஞர்களில் ஒருவரான எம்.ஜி ஆர் சுரேஷ் நேற்று மாலையில் அவரது இல்லத்தில் காலமானார். அவர் மறைந்த செய்தி அறிந்து பல உள்ளூர் கலைஞர்கள் பண்டார் சன்வேயில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சுரேஷ் 25 ஆண்டு காலமாக மலேசியாவில் நாடு முழுவதிலும் பல்வேறு மேடைகளில் எம்.ஜி ஆர் போல் தோன்றி அவரது பாடல்களுக்கு அபிநயம் பிடித்து வந்தார். அனைவரிடமும் நட்பு பாரட்டி இனிமையாக பழகக்கூடியவரான சுரேஷின் மறைவு மலேசிய கலை உலகிற்கு பெரிய இழப்பு என அவரது இல்லத்தில் கூடிய பல உள்ளூர் கலைஞர்கள் தெரிவித்தனர்.
சுரேஷ் நாயர் என்ற இயற்பெயரைக் கொண்ட அவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவரது இறுதி சடங்கு நாளை வியாழக்கிழமை மே 9 ஆம் தேதி காலை 9 மணிக்கு பண்டார் சன்வேயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். அதன் பின் அவரது நல்லுடல் பெட்டாலிங் ஜெயா கம்போங் துங்குவிலுள்ள மின் சுடலையில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.