கோலாலம்பூர், ஏப் 30 – கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் முழுவதும் பாலர் பள்ளி வகுப்புகள் விரிவுபடுத்தப்படும். பாலர் பள்ளிகளை விரிவுபடுத்துவதன் மூலம் இள வயதிலேயே மாணவர்கள் இடையிலேயே பள்ளியிலிருந்து விலகும் பிரச்சனையை தொடக்கக் கட்டத்திலேயே தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த முடியும் என கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. ஆசிரியர் தொழில் திறனை மேம்படுத்தவும் கவனம் செலுத்தப்படும் என்பதோடு சேவையில் ஆசிரியர்களின் திறமை மற்றும் தொழில்முறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களும் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆசிரியர்களின் இலக்கவியல் திறனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கற்றல் மேலாண்மை அமைப்பு (SiPP) தளமும் அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் கல்வி முறையை மேம்படுத்துவதை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து உலக வங்கி மலேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கல்வி அமைச்சு விவேகமான பதிலடி நடவடிக்கையாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தொடக்கப் பள்ளியில் சேரும் மலேசியக் குழந்தைகளில் கிட்டத்தட்ட 24 விழுக்காட்டினர் இன்னும் பள்ளிக்குத் தயாராகும் திறன்களைக் கொண்டிருக்கவில்லையென உலக வங்கி மலேசிய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.