
கோலாலம்பூர், மார்ச் 21-
இந்நாட்டில் மாணவர்களுக்கான இடைநிலைப் பள்ளி கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டும் என்று ம.இ.கா
செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் மேலவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்களின் ஆரம்ப பள்ளி கல்வி மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இடைநிலைப்பள்ளி கல்வியை கல்வியமைச்சு இதுவரை கட்டாயமாக்கவில்லை. இதனால் மாணவர்களின் இடைநிலைப்பள்ளி பாதிக்கப்படுகிறது. இதில் குறிப்பாக 80 ஆயிரம் ஆரம்ப தமிழ்ப்பள்ளி மாணவர்களில் 13 ஆயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இடைநிலைப்பள்ளி கல்வியை கைவிட்டுள்ளதால் அரசாங்கம் அதனை எப்போது கட்டாயமாக்கும் என்று டத்தோ நெல்சன் மேலவையில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து பதிலளித்த கல்வி அமைச்சர் பட்ஸிலா சீடேக், முதலில் மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு கல்வி தொடர்பாக கேள்விகளை எழுப்பி வரும் டத்தோ நெல்சனுக்கு கல்வி அமைச்சின் சார்பில் நன்றி கேறிக் கொள்வதாக தெரிவித்தார்.
செனட்டர் நெல்சன் கூறுவது போல் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது உண்மைதான். இடைநிலைப்பள்ளி கல்வியை மாணவர்கள் படிக்க கல்வியமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கை நாட்டின தலைமை நீதிபதி அலுவலகத்தில் உள்ளது என்று கல்வி அமைச்சர் சொன்னார்.
மேலும் PROGRAM MODAL COMPREHENSIVE எனும் திட்டம் மாணவர்கள் கல்வியில் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்யும். இத்திட்டம் கோல லிப்பிஸ் மற்றும் சரவாக்கில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி படிவம் மூன்று வரை படிப்பதை கட்டாயமாக்குவதை K9 திட்டமும் படிவம் K11 திட்டம் ஒன்றாம் வகுப்பு தொடங்கி 5ஆம் படிவம் வரை படிப்பதை உறுதி செய்யும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.