Latestமலேசியா

ஷா ஆலம் மாநகர் மன்றத்தில் இரு புதுமுகங்களுடன் நான்கு இந்தியர்கள் நியமனம்

ஷா அலாம் , ஜன 20 – ஷா அலாம் மாநகர் மன்றத்தின் 11வது டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் Cherami Tarman (செரேமி தர்மான்) அதிகாரப்பூர்வமாக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இந்த பதவியேற்புச் சடங்கின் ஒரு பகுதியாக மாநகர் மன்றத்தின் 22 புதிய உறுப்பினர்களும் 2024/2025ஆம் தவணைக்கு பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த 22 உறுப்பினர்களில் எட்டு பேர் புதுமுகங்களாவர். காலியாக உள்ள மேலும் இரு இடங்கள் இன்னும் நிரப்படவில்லை. இந்த நியமனத்தில் இந்தியப் பிரதிநிதிகளாக ராமு நடராஜன், முருகையா முனுசாமி, யோகோஸ்வரி சாமிநாதன், நத்தின்ட்ரன் ராஜ் பாஸ்கரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அவர்களில் ராமு நடராஜன், எம். முருகையா தவிர மற்ற இருவரும் புது முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை உறுப்பினர்களாக இருந்த வீ.பாப்பாராய்டு, காந்திமதி ஆகியோர் இம்முறை மாநகர் மன்றத்தில் இடம் பெறவில்லை. புதியவர்களில் ஆட்சிக்குழு உறுப்பினர்களான வீ.கணபதிராவ் மற்றும் வீ. பாப்பாராய்டு ஆகியோரின் அரசியல் செயலாளராக 13 ஆண்டுகள் சேவையாற்றிய அனுபவம் கொண்ட எம்.பி.ஏ. பட்டதாரியான திருமதி யோகேஸ்வரி சாமிநாதனும் ஒருவராவார்.

இந்த பதவியேற்புச் சடங்கில் உரையாற்றிய டத்தோ பண்டார், மாநகர் மன்றம் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்வதற்கும் சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மாநகர் மன்ற உறுப்பினர்களின் பரந்த அனுபவமும் நிபுணத்துவமும் பெரிதும் உதவும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலியாக உள்ள இரு கவுன்சிலர் பதவி மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டப் பின்னர் பூர்த்தி செய்யப்படும் என்றார். அவ்விரு பதவிகளுக்கும் பொருத்தமான வேட்பாளர்களை மாநில அரசு தற்போது பரிசீலித்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!