Latestமலேசியா

கழிவறைகளைப் பழுதுபார்ப்பதற்கான கல்வி அமைச்சின் ரி.ம 70,000 ஒதுக்கீடு பகுதி உதவிபெற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கு இல்லையா ? பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், எல்.பி.எஸ் பொறுப்பாளர்கள் ஏமாற்றம்

கோலாலம்பூர், செப் 13 – மிகவும் மோசமான நிலையில் இருக்கும் கழிவறைகளைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கழிவறை சீரமைப்பற்கு அனைத்து பள்ளிகளுக்கும் 70,000 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் அறிவித்திருந்தார்.

அவரது அந்த அறிவிப்பு பல பள்ளிகளில் உள்ள மோசமான கழிவறைகளைச் சீரமைப்பதற்கு விடிவு காலம் பிறந்ததாக பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் எல்.பி.எஸ் (LPS) பொறுப்பாளர்கள் மற்றும் பெற்றோர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் பந்துவான் பெனோ (Bantuan Penuh) எனப்படும் அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற பள்ளிகளுக்கு மட்டுமே கழிவறைகளைச் சீரமைப்பதற்கு 70,000 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்று தற்போது கல்வி அமைச்சர் கூறியதால் பலர் ஏமாற்றம் அடைந்திருப்பதை வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல தமிழ்ப்பள்ளிகள் பந்துவான் மொடால் (Bantuan Modal) எனும் பகுதி உதவி பெற்ற பள்ளிகளாகத்தான் இருக்கின்றன. தோட்டப்புறங்கள், முன்பு செயல்பட்ட தோட்டபுற இடங்கள் மற்றும் தொலைத் தூர பகுதிகளில் சுமார் 365 தமிழ்ப்பள்ளிகள் பகுதி உதவி பெற்ற பள்ளிகளாக இருக்கின்றன.

இந்த இடங்களில் உள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்கள்தான் போதுமான கழிவறை வசதி இன்றி மற்றும் மோசமான நிலையில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். சில மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்றது முதல் வீடு திரும்பும்வரை கழிவறையைப் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்களும் பெரும் கவலையில் இருக்கின்றனர். இந்த நிலையில் கல்வி அமைச்சின் 70,000 ரிங்கிட் உதவித் தொகை இப்போது பகுதி உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்குக் கிடையாது என்ற கல்வி அமைச்சின் அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் பெட்டாலிங் பெர்டானா வட்டாரத்தில் செர்டாங் தமிழ்ப்பள்ளி, பூச்சோங் தமிழப்பள்ளி, சுபாங் ஜெயா துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி ஆகியவை மட்டும் 70 ,000 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகையைப் பெற்றுள்ளன.

பகுதி உதவி பெற்ற பள்ளிகளில் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இந்த நாட்டைச் சேர்ந்த பிள்ளைகள்தான். அவர்களும் சுகாதார மற்றும் நல்ல அடிப்படை வசதியுடைய கழிவறைகளை பயன்படுத்துவதற்கான தகுதி கிடையாதா?

இந்த விவகாரத்தில் முழு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் பகுதி உதவி பெற்ற பள்ளிகள் என்ற கல்வி அமைச்சின் பாகுபாடு நியாயமானதாக இல்லையென பல பெற்றோர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எல்லா இடங்களிலும் பேசும்போது தமிழ், சீனம் மற்றும் தேசிய பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் எனது குழந்தைகள்தான் . அவர்களுக்கு முறையான கழிவறை வசதிகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடும் பொறுப்பும் என்றும் அடிக்கடி கூறி வருகிறார்.

ஆனால், பகுதி உதவிப் பெற்ற பள்ளிகளில் மோசமாக இருக்கும் கழிவறைகளைச் சீரமைப்பதற்கு உதவித் தொகை வசதி கிடையாது என்ற கல்வி அமைச்சின் அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசு சார்பற்ற இயக்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதில் பிரதமரும் கல்வி அமைச்சரும் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என பகுதி உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!