அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 20 – வெளிநாட்டினர் என நம்பப்படும் தாய் மற்றும் மகளின் சடலங்கள் பெக்கான் சிப்பாங் குவாலா (Pekan Simpang Kuala), அருகில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலிஸ், கழுத்தில் காயங்களுடன், அவ்விரு சடலங்களையும் மீட்டனர்.
எந்த அடையாள ஆவணங்களும் இன்றி இருந்த அந்த 34 வயது தாய் மற்றும் 10 வயது சிறுமியின் உடல்களும், சவப்பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
இதனிடையே, நேற்று இரவு 9 மணியளவில், இறந்த பெண்ணின் கணவன் எனச் சந்தேகிக்கப்படும் 43 வயது வெளிநாட்டு ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அந்த ஆடவன், இன்று தொடங்கி ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவான்.