புக்கிட் ஜாலில், ஆகஸ்ட் -5, காசா முனையில் இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீன மக்களைக் குறிப்பாக பெண்களையும் சிறார்களையும் இந்நாட்டுக்குக் கொண்டு வந்து சிகிச்சையளிக்க மலேசியா விருப்பம் தெரிவித்துள்ளது.
அந்நோக்கத்திற்காக அரசாங்கம் தனி நிதி ஒதுக்கீட்டைச் செய்யுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த மனிதநேய உதவியை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க முன் வரும் நாடுகளுக்கும் மலேசியா நன்றி பாராட்டுவதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில் பாலஸ்தீனத்துக்கான மனிதநேய உதவிகள் சென்றடைவதை எளிதாக்க உதவுமாறு, எகிப்திய அதிபர் அப்டெல் ஃபாத்தா எல் சிசியை (Abdel Fattah El-Sisi) தாம் தொடர்புக் கொண்டிருப்பதாகவும் டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியா யாரை ஆதரிக்க வேண்டுமென்ற மற்ற நாடுகளின் கருத்தைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை.
எனவே, சுதந்திர பாலஸ்தீனத்திற்கான போராட்டத்திற்கு மலேசியா தொடர்ந்து குரல் கொடுத்து வருமென, கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் உள்ள அக்சியாத்தா அரேனா (Axiata Arena) உள்ளரங்கில் நேற்றிரவு நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்று பேசிய போது பிரதமர் கூறினார்.
கடந்த புதனன்று ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டது உள்ளிட்ட இஸ்ரேலியப் படைகளின் கொடூரத்தைக் கண்டித்தும் நடத்தப்பட்ட கட்சி சாரா அப்பேரணியில், 12,000-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.