புத்ராஜெயா, மே-3, காஜாங், Sungai Ramal Baru-வில் உள்ள Sungai Kenari அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஏப்ரல்-22-ஆம் தேதி பூனைக்குட்டிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சிலாங்கூர் கால்நடை சேவைத் துறை JPV விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
2015-ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின் கீழான அவ்வறிக்கை முழுமைப் பெற்றதும், மேல் நடவடிக்கைக்காக அது மாநில அரசு துணைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வேளையில் பாதிக்கப்பட்ட பூனைக்குட்டி சிலாங்கூர் JPV அதிகாரிகளின் கண்காணிப்பில் நலமுடன் இருப்பதாக அத்துறை உறுதிப்படுத்தியது.
எனவே, விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொள்ளவோ, யூகங்களைக் கிளப்பவோ வேண்டாம் என பொது மக்களை JPV கேட்டுக் கொண்டது.
முன்னதாக வைரலானக் காணொலியில், அந்த அடுக்குமாடி வீட்டின் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில் வைத்து அப்பூனைக் குட்டியின் மீது இருவர் எரிபொருளை ஊற்றுவதும், இன்னொருவர் தீ வைப்பதும் தெரிந்தது.
கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாத அச்செயலைக் கண்ட இணையவாசிகள் பெரும் சினமடைந்த வேளை, அம்மூவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நலச் சங்கங்களும் அதிகாரத் தரப்பை வலியுறுத்தியிருந்தன.
பூனைக்குத் தீ வைத்தவனையும் அவனது 2 சகாக்களையும் போலீஸ் அடையாளம் கண்டிருப்பதாகவும், விரைவிலேயே அவர்கள் கைதாவர் என்றும் காஜாங் போலீஸ் தலைவரும் அப்போது கூறியிருந்தார்.