கோலாலம்பூர், ஆகஸ்ட்-20, கோலாலம்பூர், டேசா பெட்டாலிங்கில் (Desa Petaling) நேற்று மாலை முதலே காணாமல் போனதாகக் கூறப்பட்ட 2 சிறுவர்கள் நள்ளிரவு வாக்கில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி வீட்டில் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்ட லிப்ஃடில் சிக்கி, அங்கேகேய தூங்கி விட்ட நிலையில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
CCTV கேமராவில் பார்க்கும் வரை, சுமார் 9 மணி நேரங்களுக்கும் மேலாக இருவரும் அந்த லிஃடினுள் சிக்கிக் கொண்டது கண்டறியப்பட்டது.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறார்களுக்கு காயமேதும் ஏற்படவில்லையென, செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவீந்தர் சிங் சர்பான் சிங் (Ravindar Singh Sarban Singh) தெரிவித்தார்.
முறையே 10 மற்றும் 11 வயதிலான அச்சிறார்கள் காணாமல் போனதாக, அவர்களின் குடும்பத்தினர் நேற்று மாலை புகாரளித்திருந்தனர்.
பிற்பகல் 2.30 மணி வாக்கில் அருகிலுள்ள கடைக்குச் செல்வதாகக் கிளம்பியவர்கள் அதன் பிறகு வீடு திரும்பாததால் பயந்து குடும்பத்தார் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், லிப்ஃடில் சிக்கிக் கொண்ட போது உதவிக் கேட்டு கூச்சலிட்டு பார்த்து, சோர்ந்து போய் இருவரும் உள்ளேயே தூங்கி விட்டது விசாரணையில் தெரிய வந்தது.