கோலாலம்பூர், பிப் 8 – காதலி கைபேசி அழைப்பை எடுக்காததால், ஷா ஆலாம், செக்ஷன் U2 பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு ஒன்றில் , ஆடவன் ஒருவன் 18-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முற்பட்டான்.
அந்த தற்கொலை முயற்சி தொடர்பில், அதிகாலை மணி 3. 35-க்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையின் இயக்குநர் நோராசாம் காமிஸ் ( Norazam Khamis ) தெரிவித்தார். அழைப்பு கிடைத்தவுடன் கோத்தா எங்கெரிக் ( Kota Anggerik ) தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார். அங்கு விரைந்த தீயணைப்பு படையினர், 18 -வது மாடியின் கூரைப் பகுதியில் , தற்கொலை செய்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 27 வயது ஆடவனை சமாதானப் படுத்த முயன்றனர்.
நான்கு மணி நேரம் அந்த ஆடவனுடன் சமாதானமாக பேசிய பின்னர் , கீழே இறங்கி வர அந்த ஆடவன் இணங்கியதாக, நோராசாம் காமிஸ் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார். அந்த நபர், ஏற்கனவே கடந்தாண்டு விவாகரத்துக்குப் பின்னர் இதேபோன்று பினாங்கில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக அவர் கூறினார்.