ஈப்போ, ஆகஸ்ட்-9, Love Scam எனப்படும் இணையக் காதல் மோசடிக்கு 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் அதிகம் ஆளாவதற்கு தனிமையே முக்கியக் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தனிமையில் வாழ்வதால், இணையத்தில் முன்பின் தெரியாதவர்கள் அறிமாகும் போது அவர்கள் எளிதில் காதல் வலையில் விழுந்து விடுவதாக பேராக் மாநில வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை கூறுகிறது.
அதற்கேற்றால் போல், மருத்துவர்கள், விரிவுரையாளர்கள் போன்ற நிபுணத்துவப் பணியில் உள்ள பெண்களைத் தான் மோசடி கும்பல்கள் குறி வைக்கின்றன.
அவர்கள் கை நிறை சம்பளம் பெறுவதும் அதற்கொரு காரணமாகும்.
சமூக ஊடகங்களில் அத்தகையப் பெண்களைக் கண்டறிந்து, விமானி, வர்த்தகர், இராணவ வீரர், பெட்ரோல்-எரிவாயு பொறியாளர் என மோசடிக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்கின்றனர்.
ஏதேதோ பேசி வெறும் மூன்றே மாதங்களில் பெண்களை தங்கள் காதல் வலையில் அவர்கள் சிக்க வைத்தும் விடுகின்றனர்.
பின்னர், முதலீட்டுக்குப் பணம் வேண்டும், மருத்துவமனை கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என ஏதேதோ கூறி பெரும் பணத்தைக் கறந்து தலைமறைவாகி வாடுவதாக அத்துறை கூறியது.
பேராக்கில் கடந்தாண்டு மட்டும் 11 கோடி ரிங்கிட்டை உட்படுத்திய இணையக் குற்றங்கள் தொடர்பில் சுமார் 13,600 போலீஸ் புகார்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது