ஈப்போ, பிப் 20 – இரு குடும்பங்களை உட்படுத்திய காதல் பிரச்சனை , மருத்துவமனை வரை வந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அளவிற்கு மாறியுள்ளது. வைரலான அந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு, ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது உள்நாட்டு ஆடவர்கள் சிலர் காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பாதுகாவலருடன் ஏற்பட்ட தகராற்றினால் , மருத்துவமனையின் அவசரப் பிரிவின் முன் சண்டை ஏற்பட்டதாக , பேராக் போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.
அந்த சம்பவம் தொடர்பில் இரு போலீஸ் புகார்கள் பெறப்பட்டதாகவும், அவ்விரு சம்பவங்களும் தொடர்புடையவை என அவர் கூறினார். முன்னதாக, ஆடவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு மூவரை காயப்படுத்தியதாக போலீஸ் புகார் பெறப்பட்டது. அந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களே ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக டத்தோ மியோர் ஃபாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.
விசாரணையில், காதல் விவகாரத்தால் இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு அது சண்டை வரை வந்திருப்பது தெரிய வந்ததாக அவர் கூறினார்.