பட்டவொர்த், டிசம்பர்-30 – 1 மில்லியன் ரிங்கிட் காப்புறுதி இழப்பீட்டைப் பெறுவதற்காக சொந்தக் கண்ணையே குருடாக்கிக் கொண்டதாக, 3 பிள்ளைகளுக்குத் தந்தையான ஓர் ஆடவர் பினாங்கில் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
போலி இழப்பீட்டுக் கோரிக்கையைச் சமர்ப்பித்து காப்புறுதி நிறுவனத்தை சுமார் 4,150 ரிங்கிட்டுக்கு ஏமாற்றியதாகவும் அவ்வாடவர் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் அக்குற்றங்களைப் புரிந்ததாக 52 வயது Tan Kok Guan மீது பட்டவொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எனினும், இடது கண் பார்வையை இழந்துள்ள அந்நபர், இரு குற்றச்சாட்டுகளையுமே மறுத்து விசாரணைக் கோரினார்.
இதையடுத்து 10,000 ரிங்கிட் மற்றும் ஒருநபர் உத்தரவாதத்தின் பேரில் அவரை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், வழக்கு அடுத்தாண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி செவிமெடுக்கப்படுமென்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவ்வாடவருக்கு ஓராண்டிலிருந்து பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், பிரம்படியும் அபராதமும் சேர்த்தே விதிக்கப்படலாம்.