காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் எடை தூக்கும் வீரர் Bonnie Bunyau Gustin தங்கம் வென்றார்

கோலாலம்பூர், ஆக 5 – Birmingham-மில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் எடை தூக்கும் பிரிவில் மலேசியாவின் மாற்று திறனாளி வீரரான Bonnie Bunyau Gustin தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு கிடைத்த நான்காவது தங்கப் பதக்கம் இதுவாகும். அதோடு இப்போட்டியில் தங்கம் வென்ற மலேசியாவின் முதல் மாற்றுத் திறனாளியாகவும் 23 வயதுடைய Bonnie விளங்குகிறார். உலக சாதனையை வைத்திருக்கும் Bonnie 220 கிலோகிரேம் எடையை தூக்கி காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். இங்கிலாந்தின் Mark Swan வெள்ளிப் பதக்கத்தையும் நைஜீரியாவின் Nnamdi வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
இதனிடையே பெண்களுக்கான 10 மீட்டர் Platform முக்குளிப்பு பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்ற மலேசியாவின் Pandelela Rinong காலில் ஏற்பட்ட காயத்தினால் 11-ஆவது இடத்தையே பெற்றார். இப்போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தையும், கனடிய வீராங்கனை வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.