Latestமலேசியா

காய்கறி விலை உயர்வு ; எப்படி சமாளிப்பது ? குமுறும் மக்கள்

கோலாலம்பூர், நவ 26 – நாட்டில் கடந்த இரு வாரங்களாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு கண்டிருக்கின்றது. இதற்கு நாட்டில் ஒவ்வோரு ஆண்டும் பெய்யும் பருவமழை ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதில் மக்களைப் பாதிக்கக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த காய்கறிகளின் விலை இன்னும் சில மாதங்கள் சீனப் பெருநாள் வரை நீடிக்குமெனும் தகவலே.

விலைவாசி உயர்வு என்பது எங்களுக்கு புதிதல்ல. ஆனால் கோவிட் தொற்றினால் வருமானம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் , காய்கறிகளின் விலையும் உயர்வு கண்டால் நாங்கள் என்ன தான் செய்வது என மனக்குமுறலை வெளியிட்டிருக்கின்றனர் மக்கள். முன்னதாக இன்று காலை, கோலாலம்பூர் செந்தூல் சந்தையில் , வணக்கம் மலேசியா காய்கறி விலை உயர்வு தொடர்பான கண்ணோட்டத்தை மேற்கொண்டிருந்தது.

ஒரு கிலோ கடுகுக் கீரை 5 ரிங்கிட்டிலிருந்து 8 ரிங்கிட்டாகவும், ஒரு கிலோ முட்டைக் கோஸ் நான்கு ரிங்கிட்டிலிருந்து 6 ரிங்கிட்டாகவும், பீன்ஸ் விலை 8 ரிங்கிட்டிலிருந்து 15 ரிங்கிட்டாகவும் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் இரண்டிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

செந்தூல் சந்தையில் வியாபாரிகளை சந்தித்த போது, காய்கறிகளின் விலை 2 மடங்கு அல்லது 30 விழுக்காடு வரையில் உயர்வு கண்டிருப்பதாக தெரிவித்தனர். தோட்டத்திலிருந்து அல்லது மொத்த வியாபாரச் சந்தையில் இருந்து வாங்கும்போதே காய்கறிகளின் விலை உயர்வு கண்டிருக்கிறது. மக்களின் கஷ்டம் புரிகிறது. ஆனால், நட்டத்திற்கு நாங்கள் வியாபாரம் செய்ய முடியுமா என இவர்கள் கேள்வி கேட்கின்றனர்.

நாட்டின் மூன்றில் இரண்டு தேவைக்கான காய்கறிகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான நாடுகளில் பனிக்காலம் என்பதோடு, கோவிட் தொற்றினால் அனைத்துலக எல்லைகள் இன்னும் மூடப்பட்டிருப்பதால், காய்கறிகளின் இறக்குமதியும் பாதிக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியுள்ளது.

உள்நாட்டில் காய்கறிகளை அதிகம் உற்பத்தி செய்யும் பகுதியான கேமரன் மலையில், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை அடுத்து, தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கோலாலம்பூர் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. காரணங்கள் என்னவானாலும் இறுதியில் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே !

நேற்று Gardenia நிறுவனம், அதன் தயாரிப்பிலான அனைத்து வகை ரொட்டிகளின் விலை டிசம்பர் முதல் உயர்வு காணுமென அறிவித்திருந்தது. இவ்வாறு, ஒவ்வொரு உணவுப் பொருட்களின் விலை உயரும்போது அதை சமாளிக்கும் ஆற்றல் மக்களுக்கு உண்டா. மனக்குமுறலைத்தான் அவர்களால் முன் வைக்க முடியும்.

விலை வாசியைக் கட்டுப்படுத்த அமைச்சும், அவ்விவகாரம் சார்ந்த தரப்புகளும் தான் , காரணங்களை கூறாமல் நடவடிக்கையை எடுக்க வகை செய்ய வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!