பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 15 – கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையில், விரைவுப் பேருந்திற்குப் பின்னால் நபர் ஒருவர் பல மீட்டர் தூரம் வரை ஓடிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
தலைநகருக்குச் செல்லும் பேருந்தை தவறவிட்டதாக நம்பப்படும் அவ்வாடவர், பேருந்தை துரத்திக் கொண்டு ஓடும் காணொளி, DjYuyui எனும் டிக்டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“ஹரி ராயாவின் நான்காவது நாளில், பேருந்தை தவறவிட்டு விட்டீர்களா?” என அந்த பதிவின் கீழ் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஓரத்தில் ஓடும் அவ்வாடவர், இறுதியில் நெரிசலில் சிக்கி நின்றுக் கொண்டிருக்கும் பேருந்தில் லாவகமாக ஏறும் காட்சியும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
அந்த காணொளியின் கீழ், இணைய பயனர்கள் பலர், தங்களுக்கு நிகழ்ந்த அதேபோன்ற அனுபவங்களை பகிர்ந்து வரும் வேளை ; பயணிகள் பேருந்தில் ஏறிவிட்டார்களா என்பதை கவனிக்காமல் பெறுவதை எடுத்த ஓட்டுனரை சிலர் சாடியும் வருகின்றனர்.