
மலாக்கா, செப்டம்பர் 20 – வாட்ஸ்அப் செயலி வாயிலாக, ஒரு நாள் முன்பு தான் அறிமுகமான நண்பர் உட்பட இரு ரோஹிங்கியா ஆடவர்களால், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, பதின்ம வயது பெண் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, க்ளெபாங் (Klebang) கடற்கரையில், கார் ஒன்றில், 14 மற்றும் 27 வயதான அவ்விருவரும் அப்பெண்ணை மாறி மாறி கற்பழித்தாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், மறுநாள் அப்பெண்ணின் சகோதரர் போலீஸ் புகார் செய்த வேளை ; அடுத்த 24 மணி நேரத்தில் அந்த இரு ரோஹிங்கியா ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக, மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஜைனுல் சமா தெரிவித்தார்.
மூன்றாம் படிவ மாணவியான அப்பெண், செப்டம்பர் 14-ஆம் தேதி, பிற்பகல் மணி இரண்டு வாக்கில், வாட்ஸ்அப்பில் அறிமுகமான தனது 14 வயது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் உலாவ சென்ற போது, அவன் தனது 27 வயது நண்பனை அறிமுகம் செய்து வைத்துள்ளான்.
அவர்கள் பின்னர் Preve ரக காரில் அப்பெண்ணை கடற்கறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், அதிகாலை மணி இரண்டுக்கும் மூன்றுக்கும் இடைப்பட்ட நேரத்தில், விளையாட்டு பூங்கா ஒன்றில் அப்பெண் விட்டுச் செல்லப்பட்ட வேளை ; அவரது அந்தரங்க உறுப்பு கிழிந்து காயம் ஏற்பட்டுள்ளது, மலாக்கா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் இரு ரோஹிங்கியா ஆடவர்கள், இம்மாதம் 15-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரையில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.